கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-04-05 14:55 GMT
விழுப்புரம், 

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை சோதனைச்சாவடியில் கடந்த 22.8.2017 அன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் அங்கு நிற்காமல் சென்றது. உடனே இதுபற்றி அங்குள்ள போலீசார், பண்ருட்டி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனிடையே அந்த காரில் வந்த நபரும், அதன் டிரைவரும் மேல்கவரப்பட்டு என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 27 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பதுக்கிக் கொண்டிருந்தனர்.அந்த சமயத்தில் அங்கு வந்த பண்ருட்டி போலீசார், அந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தஞ்சாவூர் புன்னைநல்லூரை சேர்ந்த மலைச்சாமி (வயது 40), கார் டிரைவரான கும்பகோணத்தை சேர்ந்த சிங்காரம் என்பதும், ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் மலைச்சாமி, கஞ்சா பொட்டலங்களை கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்து பின்னர் அங்கிருந்து வாடகை கார் மூலம் தஞ்சாவூருக்கு சென்று அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு சிறை

இதையடுத்து மலைச்சாமி, சிங்காரம் ஆகிய இருவரையும் பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தி 2 பேர் மீதும் விழுப்புரம் போதை மருந்துகள் மற்றும் உளசார்புள்ள பொருட்களுக்கான சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட மலைச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், சிங்காரத்தை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மலைச்சாமி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்