விக்கிரவாண்டியில் விவசாயிகள் சாலை மறியல்

வரத்து அதிகரிப்பால் காராமணி பயிர் விலை குறைந்தது. இதனால் விக்கிரவாண்டியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-04-05 14:53 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று  காராமணி பயிர் 1000 மூட்டைகள் வந்தன. ஒரு மூட்டையில் 100 கிலோ காராமணி பயிர் இருக்கும். ஒரு மூட்டை காராமணி பயிர் ரூ.11 ஆயிரத்து 500-க்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். 
இந்த நிலையில் இன்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 3 ஆயிரத்து 500 மூட்டைகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த பயிர் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் விலையை குறைத்து ஏலம் எடுத்தனர். 

சாலை மறியல்

அதாவது காராமணி பயிர் 1000 மூட்டைக்கு தலா ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையில் விலை நிர்ணயம் செய்து ஏல் எடுத்தனர். மீதமுள்ள மூட்டைக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போனது. மேலும் உளுந்து உள்ளிட்ட விளைபொருட்களின் விலையையும் குறைத்து ஏல எடுத்தனர். 
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மாலை 4.15 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு 

இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், மாலை 5.30 மணி வரை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது. 

மேலும் செய்திகள்