பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

திருவண்ணாமலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-05 14:19 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்மோட்டார் பழுது

திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள அரசு குடியிருப்பு வாரியம் கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இங்குள்ள குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதாகி உள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக இங்குள்ள குடியிருப்புக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. 

இதற்கிடையில் கடந்த 4 நாட்களாக நகராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

அந்த தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் கலங்காக உள்ளதாக கூறப்படுகிறது. 

மின் மோட்டாரை சரி செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று மாலை செங்கம் சாலையில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் அங்கு தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம்  உடனடியாக மின் மோட்டார் சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்