கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 460 பேருக்கு நிவாரணம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 460 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-04-05 14:18 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 460 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ரூ.50 ஆயிரம் நிவாரணம்

நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து உள்ளது. மேலும் 4 நாட்கள் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. நீலகிரியில் இதுவரை 42 ஆயிரத்து 130 பேர் கொரோனாவால் பாதித்தனர். 41 ஆயிரத்து 897 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

கொரோனா பாதிப்பால் இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்க மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=751 என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு ஊட்டியில் அமைக்கப்பட்ட இறப்பை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நபரின் வாரிசுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படுகிறது. 

51 மனுக்கள் பரிசீலனை

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 642 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 460 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. மேலும் 131 மனுக்கள் 2 முறை பெறப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. 

மீதமுள்ள 51 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு முன்னர் கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள்(அதாவது மே மாதம் 18-தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் அளிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்.

தகுதி அடிப்படையில்...

மேற்கண்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை தகுதி அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். 

எனவே கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்