குடிபோதையில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை
நடுவட்டம் அருகே குடிபோதையில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்
நடுவட்டம் அருகே குடிபோதையில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கூலி தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் அருகே உள்ள கிளன்மார்கன் இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் ரங்கசாமி, வெங்கடேஷ் ஆகியோர் நேற்று வழக்கம்போல் ஊட்டிக்கு கூலி வேலைக்கு சென்றனர். வேலை முடிந்ததும் அவர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். தொடர்ந்து ஊட்டியில் இருந்து கிளன்மார்கனுக்கு நடந்து வந்தனர்.
அடித்துக்கொலை
அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. மேலும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் திடீரென ரங்கசாமியை சரமாரியாக கையால் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த ரங்கசாமி கீழே விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பைக்காரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது
அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வெங்கடேஷை பிடித்து விசாரித்தனர். அதில், தங்களுக்குள் குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து ரங்கசாமியை கையால் அடித்ததாகவும், அதில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் உத்தரவின்பேரில் பைக்காரா போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேஷை கைது செய்தனர்.