இலங்கைக்கு நிதி வழங்கும் நிலையில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் துரை வைகோ வலியுறுத்தல்
இலங்கைக்கு நிதி வழங்கும் நிலையில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று துரை வைகோ திண்டுக்கல்லில் கூறினார்.
திண்டுக்கல்:
துரை வைகோ பேட்டி
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விண்ணை தாண்டி செல்கிறது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்துகள், கட்டுமான பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மீது மத்திய அரசு சுமையை திணிக்கிறது. எனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் புரிதலோடு ம.தி.மு.க. இடம்பெற்று இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீதம் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டோம்.
மீனவர் பிரச்சினை
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்தியாவிடம் இருந்து இலங்கை நிறைய எதிர்பார்க்கிறது. அதேபோல் இந்தியாவும் நிதி வழங்குகிறது. அதில் தவறு எதுவும் இல்லை. அதேநேரம் 40 ஆண்டுகளாக நிலவும் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு, கச்சத்தீவு பிரச்சினை குறித்து இந்த நேரத்தில் மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், அவர் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர் செல்வராகவன், பொருளாளர் சுதர்சன், அரசியல் ஆலோசனைகுழு உறுப்பினர் ராமசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.