ஒட்டன்சத்திரத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் பங்கேற்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் பங்கேற்றனர்.;
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், தாராபுரம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், சுப்புரத்தினம், குப்புசாமி, தென்னம்பட்டி பழனிசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் நடராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திட்டங்கள் முடக்கம்
ஆர்ப்பாட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் என மக்களுக்கான திட்டங்களை தி.மு.க. அரசு தற்போது முடக்கிவிட்டது. இதுவே தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது. இதனால் இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்துள்ள அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதியை கூறி 40 லட்சம் வாக்குகளை தி.மு.க. பெற்றது. ஆனால் தற்போது சுமார் 12 லட்சம் பேருக்கு மட்டுமே பெயரளவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அல்லல்படும் மக்கள்
திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் அல்லல்படுகின்றனர். டி.வி. பெட்டியை திறந்தாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற படம் மட்டுமே வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி போன்று, தமிழகத்தில் குளங்கள் வெட்டப்பட்டனவா? மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட்டதா? தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை. சொத்து வரி உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதனை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. இதற்கு அந்தந்த மாநிலங்கள், மாநில ஜி.எஸ்.டி. வரியை குறைத்ததே காரணம். அதேபோல் தமிழக அரசும், மாநில ஜி.எஸ்.டி. வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.