சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
அதன்படி வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொண்டு இருக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதி
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 505 வாக்குறுதிகளில் 487-வது வாக்குறுதியாக சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்து உள்ளார்கள்.
தேர்தல் வாக்குறுதியை மீறும்வகையில் தமிழகத்தில் 150 சதவீதத்திற்கு மேலாக சொத்து வரியை உயர்த்தி இருக்கின்றனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சொத்து உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும் திருவண்ணாமலை அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மேம்பால பணி கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதனை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட அமைப்பு தலைவர் இ.என்.நாராயணன், பேரவை செயலாளர் வெங்கடேசன், இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், பாசறை செயலாளர் பர்வதம், இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார்,
தொழிற்சங்க செயலாளர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சரவணன், கலியபொருமாள் உள்பட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.