திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
முருகபவனம்:
திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோவிலாக, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் என்று அழைக்கப்படும் ஞானாம்பிகை-காளகத்தீசுவரர், அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணியளவில் விநாயகர் வழிபாடு நடந்தது. அதன்பிறகு ரிஷப வாகன கொடி வீதி உலா நடைபெற்று கோவிலை அடைந்தது. பின்னர் சிவவாத்தியம் முழங்க ரிஷப யாகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் பால், பன்னீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் ரிஷப வாகன கொடி, கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணியளவில் அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் கேடயத்தில் சுவாமி திண்டுக்கல் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. நேற்று தொடங்கிய இந்த சித்திரை திருவிழா வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி திருவிழா நாட்களில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு யாகம் மற்றும் கேடயம், நந்தி, யானை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம், மணியம் ஜெயபிரகாஷ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.