ராஜாபுதுக்குடி கிராமத்துக்கு ஒருவாரத்தில் சீவலப்பேரி திட்டத்தில் குடிநீர் வினியோகம்: அதிகாரிகள் தகவல்

ராஜாபுதுக்குடி கிராமத்துக்கு ஒருவாரத்தில் சீவலப்பேரி திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-04-05 12:07 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு ஒரு வாரத்தில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினை
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம், ராஜாபுதுக்குடி நீரேற்று நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். உச்சகட்டமாக நேற்று முன்தினம் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு குடிநீர் வழங்க கோரி  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலம் முன்பு காலிக் குடங்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
சமாதான கூட்டம்
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்திரவின்பெயரில் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் பேச்சிமுத்து தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட செயற்பொறியாளர் ரெஜினால்ட், நெல்லை, தூத்துக்குடி,தென்காசி மண்டல குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூர்பாண்டியன், விருதுநகர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, விருதுநகர் மாவட்ட திட்ட கோட்டப் செயற்பொறியாளர் கென்னடி, உதவி நிர்வாக பொறியாளர் மணி, கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப், கயத்தாறு யூனியன் பொறியாளர் பீர்முகமது, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகசாமி, ஊராட்சி செயலர் சண்முககுமார், கிராம மக்கள், ஊர் நாட்டாமைகள் மாசாணம், சுடலை ஆகியோர் கலந்து கொண்டனர். 
ஒரு வாரத்தில் குடிநீர் வினியோகம்
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. இதன்படி, இந்த கிராம மக்களுக்கு கலெக்டரின் பரிந்துரைப்படி விரைவில் ஒரு வாரத்தில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்

மேலும் செய்திகள்