பெண் டாக்டர் வீட்டில் 2 ஆசாமிகளின் கைரேகை சிக்கின

நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 97 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களின் கைரேகைகள் சிக்கின. இதுதொடர்பாக 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-04 23:03 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 97 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களின் கைரேகைகள் சிக்கின. இதுதொடர்பாக 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
நகை-பணம் கொள்ளை
நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் மேற்கு லுத்தரன் தெருவை சேர்ந்தவர் அமலகுமார். இவருடைய மனைவி ஜலஜா தேவகுமாரி(வயது 59), டாக்டர். கடந்த 2-ந் தேதியன்று இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல பணிக்கு சென்றார். அப்போது பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 
பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 97 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
2 கைரேகைகள் பதிவு
மறுநாள் காலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஜலஜா தேவிகுமரி, வீட்டில் நடந்த கொள்ளை நடத்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். 
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது கொள்ளை நடந்த அறையில் மர்மநபர்களின் 2 கைரேகைகள் சிக்கின. 
முகமூடி கொள்ளையன் 
மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரு நபர் முகமூடி அணிந்தபடி, கையில் பையுடன் ஓடி சென்றது பதிவாகி இருந்ததாகவும், அந்த நபர் கையுறை அணிந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 
இதற்கிடையே இந்த கொள்ளையில் துப்பு துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என தனிப்படையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்