பாளையங்கோட்டை பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை
பாளையங்கோட்டை பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கலெக்டரிடம், சமத்துவ மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘‘நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பாளையங்கோட்டை பஸ் நிலையத்தை திறந்து வைத்தபோது அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டு, தற்போது மறுசீரமைக்கப்பட்ட பஸ்நிலையத்தில் வைக்கப்படவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. எனவே மீண்டும் பஸ் நிலையத்தில் காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை வைக்க வேண்டும். மேலும் பாளையங்கோட்டை பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஒருமையில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மானூர் அருகே உள்ள கட்டபுளி கிராமத்தில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். சேரன்மாதேவி அருகே உள்ள ஓமநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் அந்த கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
பட்டா வழங்க வேண்டும். பொன்னாக்குடி சமத்துவபுரத்தில் குடியிருந்து வருகின்ற மக்கள் தங்களுக்கு உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.