அங்கன்வாடி மையம் அமைக்கக்கோரி மனு
அங்கன்வாடி மையம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்து பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், தாமரைக்குளம் ஊராட்சி 3 கிராமங்களை உள்ளடக்கியது. இதில் தாமரைக்குளம் கிராமம் மற்ற 2 கிராமங்களை விட அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். வெங்கட்டரமணபுரம், வெங்கட்டராமபுரம் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மையம் தனித்தனியே இயங்கி வருகிறது. ஆனால் தாமரைக்குளம் கிராமத்தில் அங்கன்வாடி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தொலைவில் வெங்கட்டராமபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு பல்வேறு சிரமங்களுக்கு இடையே குழந்தைகள் சென்று வருகின்றனர். எனவே தாமரைக்குளத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க ஆவன செய்து, தாமரைக்குளம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அங்கன்வாடி மையமாக பயன்படுத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.