வீட்டில் பதுக்கப்பட்ட 187 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்ட 187 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-04 21:28 GMT
பாடாலூர்:

போலீசார் சோதனை
தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்படியும், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் அறிவுறுத்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாடாலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரூர் கிராமத்தை சேர்ந்த முத்து செல்வன் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டில் மொத்தம் 187 ½ கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
4 பேர் கைது
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெளிமாவட்ட நபர்கள் மூலம் முத்துசெல்வன்(வயது 52), லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் கார்த்திக்(28), திருச்சி மாவட்டம் வாலையூர் நடுத்தெருவை சேர்ந்த வீரய்யன் மகன் சிதம்பரம்(32) மற்றும் நாட்டார்மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த பாஸ்கர்(37) ஆகியோர் சேர்ந்து அவரவர் தேவைக்கு ஏற்றவாறு புகையிலை பொருட்களை வாங்கி, விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களை ேபாலீசார் பறிமுதல் செய்து, பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 84 ஆகும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்