தச்சு தொழிலாளியை கத்தியால் குத்திய ரவுடி சிறையில் அடைப்பு

தச்சு தொழிலாளியை கத்தியால் குத்திய ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-04-04 21:28 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் பிச்சையன் மகன் அபிஷேக் (வயது 21). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் இந்திரா நகரை சேர்ந்த செந்தில் மகன் கவுதம்(19). கல்லூரி மாணவரான இவருக்கும், பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை டாஸ்மாக் குடோன் அருகே உள்ள தர்ஷினி நகரை சேர்ந்த சுதர்சன் என்ற சூனி கண்ணனின்(41) மகனுக்கும் இடையே ஒரு வாட்ஸ்-அப் குழுவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதுகுறித்து கேட்பதற்காக கவுதமுடன் அபிஷேக், சூனி கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அபிஷேக், கவுதம் ஆகியோரிடம், சூனி கண்ணன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சூனி கண்ணன் அபிஷேக்கை கத்தியால் குத்தியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அபிஷேக் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவமனைக்கு வந்த கவுதமை, சூனி கண்ணன் குடும்பத்தினர் தாக்கினர். இதனால் கவுதமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அபிஷேக், கவுதம் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து சூனி கண்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சூனி கண்ணன் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் ரவுடி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்