போலீஸ்காரரை லத்தியால் சரமாரியாக தாக்கிய ஏட்டு
பண்ருட்டி கிளை சிறையில் கைதிகளை பார்க்க வந்த உறவினர்களை அனுமதிக்காததால் போலீஸ்காரரை லத்தியால் சரமாரியாக ஏட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
பண்ருட்டி,
பண்ருட்டி பானுப்பிரியா நகரில் வசித்து வருபவர் மனோகர் மகன் சதீஷ்குமார்(வயது 26). இவர் பண்ருட்டி கிளை சிறைச்சாலையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே கிளை சிறைச்சாலையில் தலைமை காவலராக(ஏட்டு) ராஜகோபால் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2-ந் தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் சிறைச்சாலையில் உள்ள 2 கைதிகளை பார்ப்பதற்காக அவர்களது உறவினர்கள் வந்தனர். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் சதீஷ்குமாரிடம் ஏட்டு ராஜகோபால் சிறைச்சாலையின் கேட்டின் பூட்டை திறந்து விடுமாறு கூறினார். அதற்கு போலீஸ்காரர் சதீஷ்குமார், சனிக்கிழமை விடுமுறை என்றும், கேட்டினை திறக்க முடியாது என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு ராஜகோபால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
லத்தியால் தாக்கிய ஏட்டு
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவும் ஏட்டு ராஜகோபால், போலீஸ்காரர் சதீஷ்குமார் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏட்டு ராஜகோபால், எனக்கு வரவேண்டிய வருமானம் உன்னால் தடைபட்டதாக கூறி லத்தியால் போலீஸ்காரர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சதீஷ்குமாருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ்காரர் சதீஷ்குமார், பண்ருட்டி ஜெயில் சூப்பிரண்டு மங்கவரத்தாளிடம் புகார் செய்தார். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.