சகாலா திட்டத்தில் ‘தட்கல்' முறை அறிமுகம்; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ்

கர்நாடகத்தில் சகாலா திட்டத்தில் ‘தட்கல்' முறையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

Update: 2022-04-04 21:05 GMT
பெங்களூரு:

  பள்ளி கல்வித்துறை மற்றும் சகாலா மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

  கர்நாடக அரசின் 99 துறைகள் மூலம் 1,115 சேவைகள் சகாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறித்த காலத்திற்குள் இந்த சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. குறித்த காலத்திற்குள் சேவைகளை வழங்காத அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில சேவைகள் பொதுமக்களுக்கு அவசர தேவைக்காக ஓரிரு நாட்களில் தேவைப்படுகிறது.

  அத்தகைய அவசர தேவைகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் ‘தட்கல்' முறையை அறிமுகம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை 26.56 கோடி விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சம்பளம் கிடைக்கவில்லை

  குறித்த காலத்தில் சேவை வழங்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்று புகார்கள் வருகின்றன. அதன் மீது கவனம் செலுத்தும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சிக்கமகளூருவில் கணவரை இழந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால் 11 மாதங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஒரே நாளில் வேலை முடிந்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

  இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
  இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

மேலும் செய்திகள்