வீடு புகுந்து திருடியபோது கையும், களவுமாக சிக்கியதால் கத்திமுனையில் சிறுமியை கடத்தி தப்பிய திருடன் கைது

பெலகாவி அருகே, வீடு புகுந்து திருடிய போது பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் சிறுமியை கடத்திவிட்டு தப்பி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-04 20:59 GMT
பெலகாவி:

வீட்டில் திருடிய வாலிபர்

  பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா மங்கரிவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேசின் வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் வீட்டில் இருந்த பொருட்களை திருடி கொண்டு இருந்தார். அப்போது சுரேசும், அவரது குடும்பத்தினரும் கண்விழித்தனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார்.

  அந்த வாலிபர் தப்பி விடாமல் இருக்க சுரேஷ் தனது குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் கொடுத்தார். இதனால் அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சுரேசின் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த அவரது 11 வயது மகளை தூக்கினார். பின்னர் அவர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து யாராவது தன்னை பிடிக்க முயன்றால் அந்த சிறுமியை கொலை செய்வதாக மிரட்டினார்.

சிறுமி மீட்பு-கைது

  இதனால் யாரும் அந்த நபர் அருகே செல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த வாலிபர், சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து சிக்கோடி போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் அந்த சிறுமியை வாலிபர் நிப்பானி அருகே கரகடா என்ற கிராமத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

  இதனால் அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அந்த சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அனில் (வயது 28) என்பது தெரியவந்தது. திருட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கியதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க கத்திமுனையில் சிறுமியை கடத்தியதும் தெரிந்தது. கைதான அனில் மீது சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்