கோடரியால் வெட்டி தொழிலாளி படுகொலை

மேச்சேரி அருகே கோடரியால் தொழிலாளியை தம்பியே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2022-04-04 20:44 GMT
மேச்சேரி:-
மேச்சேரி அருகே கோடரியால் தொழிலாளியை தம்பியே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட தொழிலாளி
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே வெள்ளார் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பசுவதி. இவர்களுக்கு ஆஞ்சி குமார் (வயது 27), குமரேசன் (25), செல்வகுமார் (21) என்ற 3 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். இவர்களில் ஆஞ்சி குமார், குமரேசன் ஆகிய இருவரும் கட்டிட தொழிலாளிகள் ஆவர்.
இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசன், தனது தாயார் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அண்ணன்-தம்பி இருவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருந்த போது தாயார் சேர்த்து வைத்த பணத்தை குமரேசன் எடுத்து செலவு செய்தது குறித்து அண்ணன் ஆஞ்சி குமார் கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறி தம்பி குமரேசன் மறுத்துள்ளார்.
கோடரியால் வெட்டிக்கொலை
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தகராறு முற்றியதில் குமரேசன் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து, ஆஞ்சிகுமாரின் கழுத்தில் வெட்டினார். மேலும் கோடரியின் பின் பகுதியால் அண்ணனின் வயிற்றில் பலமாக குத்தி தாக்கி உள்ளார். 
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஆஞ்சி குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 இதனிடையே மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆஞ்சி குமார் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றியதுடன், தம்பி குமரேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேச்சேரி அருகே அண்ணனை தம்பியே கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்