கல்லூரி மாணவி விபத்தில் பலி
அயோத்தியாப்பட்டணத்தில் கல்லூரி மாணவி விபத்தில் பலியானார். தந்தை கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அயோத்தியாப்பட்டணம்:-
அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி அருகே ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 60), ஓய்வுபெற்ற அரசு பணியாளர். இவருடைய மகள் தனுஸ்ரீ (22). அரசு கலை, அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தந்தை, மகள் இருவரும் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து மின்னாம்பள்ளி நோக்கி அரூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற ஆட்டோவில் மோதி கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி தனுஸ்ரீ வயிற்றின் மேல் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தனுஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜன் லேசான காயத்துடன் தப்பித்தார் இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காரிப்பட்டி போலீசார், தனுஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மகள், தந்தை கண் முன்னே லாரியில் சிக்கி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.