சேலம் வழியாக லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:-
ராமநாதபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரத்தில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சென்னை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குனர் ஆபாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் வழியாக பெங்களூரு நோக்கி சென்ற ஒரு லாரியை மறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 400 மூட்டைகளில் சுமார் 20 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும், இந்த கடத்தலில் ராமநாதபுரத்தை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேரில் 4 பேர் லாரியுடன் மற்றொரு காரில் சென்றதால் அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பேர் கைது
இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கல் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 32), வீரசேகர் (35), சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பரமேஸ்வரன் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், வடிவேல்முருகன், சத்யபிரகாஷ் ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து 7 பேர் மீது ரேஷன் அரிசியை கடத்தியதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? பெங்களூருவில் யாருக்கு ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.