டாக்டர் வீட்டில் 50 பவுன்-பணம் கொள்ளை

மதுரையில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-04-04 20:40 GMT
மதுரை
மதுரையில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் வீடு
மதுரை மேலக்கால் பி.கே.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி (வயது 62). இவருடைய மகன் சென்னையில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரோஸ்லின் மேரி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் மகன் வீட்டுக்கு சென்று விட்டார். நீண்டநாட்களாக பூட்டியிருந்த வீட்டை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று காலை ரோஸ்லின் மேரி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கைவரிசை காட்டிய கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். பீரோவில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. இதுகுறித்து ரோஸ்லின் மேரிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
செல்போனில் அவரிடத்தில் போலீசார் விசாரித்தபோது, பீரோவில் 50 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த பணம், நகை கொள்ளை போய் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
மேலும், அவர் வந்த பின்னரே எவ்வளவு நகை, பணம் கொள்ளை போயிருக்கிறது என்ற முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 
மதுரையில் டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்