குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அந்தியூர் அருகே உள்ள கிராமம் கெட்டிசமுத்திரம். இங்குள்ளவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர்- பர்கூர் ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்துக்கு நேற்று காலை 8 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள ரோட்டில் காலிக்குடங்களுடன் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரமாக இருந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு பஸ்சில் சென்ற மாணவ- மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், கிராம ஊராட்சி ஆணையாளர் சிவசங்கர், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் எங்களுடைய கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டும், அவைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும்,’ என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதற்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பதில் அளிக்கையில், ‘குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி இனிமேல் எந்த குறையாக இருந்தாலும், என்னிடம நேரில் தெரிவியுங்கள். அந்த குறைகளை நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை 10 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக அந்தியூரில் இருந்து செல்லம்பாளையம், சங்கம்பாளையம் பர்கூர், ஆலம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.