108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பெற்றாா்.
டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உறவினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் வேன் குன்றி கிராமத்துக்கு விரைந்து சென்றது. பின்னர் அங்கிருந்து சிவகாமியை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஆம்புலன்சை அரப்புலி சாமி ஓட்டினார். மருத்துவ உதவியாளராக அஜித்குமார் இருந்தார். டி.என்.பாளையத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதைத்தொடர்ந்து சிவகாமிக்கு மருத்துவ உதவியாளரான அஜித்குமார் பிரசவம் பார்த்தார். அதில் சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.