பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வடலூர், காட்டுமன்னார்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வடலூர்,
வடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு நகராட்சி கமிஷனர் குணாளன் தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் சுப்புராயலு, புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சிவகுமார் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, விருத்தாசலம் ரோடு, சத்திய ஞானசபை வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில், கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், சாகுல்ஹமீது, பிரபு, பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, அரசு கலைக்கல்லூரி மற்றும் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். துணை தலைவர் ராஜலட்சுமி மணிமாறன், செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதோடு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, துப்புரவு ஆய்வாளர் துரைராஜ், தலைமை ஆசிரியர் மதிவாணன், என்.சி.சி. அலுவலர் தர்மராஜ் மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.