பிளவக்கல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

பிளவக்கல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-04-04 19:33 GMT
விருதுநகர்,
பிளவக்கல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்துள்ளனர். 
மின் வாரிய அலுவலகம் 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் அனைத்து சமுதாய மக்கள் உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
மம்சாபுரத்தில் நீண்டகாலமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த மின் வாரிய அலுவலகத்தினை வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. மின்வாரிய அலுவலகத்தை அங்குள்ள பள்ளி கட்டிடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். 
தூய்மை பணியாளர்கள் 
சேத்தூர் காட்டு நாயக்கன் தெருவில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தாங்கள் துப்புரவுப் பணிசெய்து வரும் நிலையில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் பேரூராட்சி அதிகாரிகள் ஐகோர்ட்டு தடை இருந்தும் வீடுகளை காலி செய்ய வற்புறுத்தும் நிலை உள்ளதால் தங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி உள்ளனர்.
பாசனத்திற்கு தண்ணீர் 
சீவனேரி கண்மாய் பாசன விவசாய சங்கத்தினர் அதன் தலைவர் முத்துராஜ் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், பிளவக்கல் அணையில் 28 அடி தண்ணீரும், கோவிலாறு அணையில் 18 அடிதண்ணீரும் உள்ளது. 
ஆதலால் இந்த தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.

மேலும் செய்திகள்