வங்கி ஊழியர் மனைவியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
விருத்தாசலம் அருகே தனியார் வங்கி ஊழியர் மனைவியிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவமணிகண்டன் மனைவி பிருந்தா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் அஸ்விதா என்ற பெண் குழந்தை உள்ளது. சிவ மணிகண்டன் பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்த பிருந்தா இயற்கை உபாதைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளிப்புறம் உள்ள கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
4½ பவுன் சங்கிலி பறிப்பு
அப்போது அங்கு கால் சட்டை அணிந்து நின்ற 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் திடீரென பிருந்தாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சல் எழுப்பினார்.
இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பிருந்தாவின் மாமனார் நடராஜன்(64), மாமியார் பழனியம்மாள்(58) ஆகியோர் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். தாலி சங்கிலியை மர்மநபர் பறித்தபோது பிருந்தாவின் கழுத்தில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்குவதற்காக, கடலூரிலிருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. ஆனால், அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அதிகாலையில் வங்கி ஊழியர் மனைவியிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.