மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி மாவட்டத்தில் 14 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மத்திய அரசு பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். சுங்க கட்டண விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 4-ந் தேதி (அதாவது நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இருசக்கர வாகனத்தை பாடையில் வைத்தும், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரை
மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், கருப்பையன், ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், பக்கிரான், முத்துகுமாரசாமி, மாநகர் குழு உறுப்பினர்கள் திருமுருகன், செந்தமிழ்செல்வம், பாபு, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பாலக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் மாலை அணிவிக்கப்பட்ட சிலிண்டரை பாடையில் தூக்கிப்பிடித்தபடி கோஷம் எழுப்பினர். மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம், வட்டக் குழு உறுப்பினர் சின்னத்தம்பி, நகர நிர்வாகிகள் தினேஷ், சேகர், நரசிம்மன், மாதர் சங்கம் சத்தியா, மாணவர் சங்கம் சிவானந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கிள்ளை, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.