பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

35 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பள்ளி மாணவர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-04 19:22 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் கணிக்கர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கணிக்கர் இனத்தை (குடுகுடுப்பைகாரர் இனம்) சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும், இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர்.

முற்றுகை

இதனால் பாதிக்கப்பட்ட கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் நேற்று தங்கள் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பஸ்களில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, தங்களுக்கு குடுகுடுப்பை வேண்டாம், புத்தகம் தான் வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சிலர் குடுகுடுப்பை அடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது அவர்கள், தாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர், கோட்டாட்சியர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும், சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதி மாணவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாமலும், அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாமலும், வேலைக்கு போக முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் படித்த மாணவர்களும் வேறு வழியின்றி கூலி வேலைக்கும், குடுகுடுப்பை அடிக்கும் வேலைக்கும் தான் செல்ல வேண்டி உள்ளது. அதனால் சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினார். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்