அனுமதியின்றி வழிபாட்டு தலம் கட்டுவதாக கூறி எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க.வினர் ஊர்வலம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
அனுமதியின்றி வழிபாட்டு தலம் கட்டுவதாக கூறி பா.ஜ.க.வினர் எச்.ராஜா தலைமையில் ஊர்வலமாக சென்றனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரமங்கலம்:
அறக்கட்டளை கட்டிடம்
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவர் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு போன்ற அமைப்பில் கட்டிடம் கட்டிய நிலையில் அந்த கட்டிடத்தின் மேலே இஸ்லாமிய வழிபாட்டு தலம் போல கட்டுவதாக அறக்கட்டளை பெயரில் பலகையும் வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பா.ஜ.க.வினர் அனுமதி இல்லாமல் வழிபாட்டு தலம் கட்டுவதாக கூறி போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.
சமாதான பேச்சுவார்த்தை
பா.ஜ.க. வினரின் போராட்ட அறிவிப்பையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகம், போலீசார் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த டிசம்பர் இறுதிக்குள் வழிபாட்டு தலத்தை அகற்றுவதாக முடிவானது. ஆனால் அதை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவிலில் திரண்ட பா.ஜ.க. வினர் அங்கிருந்து ஊர்வலமாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தை நோக்கி சென்றனர்.
12-ந் தேதிக்குள் அகற்ற உறுதி
ஊர்வலமாக போராட்டத்திற்கு சென்ற பா.ஜ.க. வினரை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையிலான போலீசார் வழிமறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் எச்.ராஜாவுக்கும் அங்கு வந்த அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களை கைது செய்து ஏற்றி செல்ல தனியார் வாகனங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தையையடுத்து மேற்பனைக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, ஏப்ரல் 12-ந் தேதிக்குள் கட்டிட உரிமையாளரே வழிபாட்டு தலத்தை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் 13-ந் தேதி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றுவதாக எழுதிக் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலையை மறித்து நின்று, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது உள்பட 3 பிரிவின் கீழ் கீரமங்கலம் போலீசார் எச்.ராஜா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களை திரட்டி போராட்டம்
இதுகுறித்து எச்.ராஜா கூறுகையில், அனுமதி இல்லாமல் வழிபாட்டு தலம் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் அறிவித்த நிலையில் கடந்த டிசம்பருக்குள் இடிப்பதாக அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர். ஆனால் இடிக்கவில்லை. இப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஒரு வாரத்தில் இடிப்பதாக எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி அகற்றவில்லை என்றால் மீண்டும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.