தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-04 18:58 GMT
கரூர்
தேரோட்டம் 
தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அமராவதி ஆற்றிலிருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடந்தது. கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. 
இதனையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருளசெய்து மேளதாளங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
கம்பம் ஆற்றில் விடுதல்
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முத்துமாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு மாரியம்மன் கம்பம், பகவதியம்மன் கரகம் அமராவதி ஆற்றில் கொண்டு விடுதல் நிகழ்ச்சியும், வானவேடிக்கையும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்