புதுச்சத்திரத்தில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சத்திரத்தில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த பிறந்தது முதல் 18 வயதிலான குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்று தருதல், தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைக்கு உள்ள குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து கொண்டு, அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றவும், கல்வி கற்கவும் பெற்றோர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.