ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அழிப்பு-வருவாய்த்துறையினர் நடவடிக்கை
ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றை ஆக்கிரமித்து 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அழிக்கப்பட்டன.
பரமத்திவேலூர்:
நீர்நிலை ஆக்கிரமிப்புகள்
தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ராசிபுரம், வெண்ணந்தூர், மோகனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பயிர்கள் அழிப்பு
அதன்படி ஜேடர்பாளையம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் நீர்வளத்துறையினர் கணக்கீடு செய்து வந்தனர். இந்தநிலையில் ஜேடர்பாளையம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்று பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சிலர் கரும்பு, பில்லுகரணை, சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்திருந்தனர்.
இதையடுத்து நேற்று பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், நீர்வளத்துறை இளம்பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, அழிக்கப்பட்டன. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.