தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-04 18:32 GMT
பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு செல்லும் கான்கிரீட் மலைப்பாதையில் ஆபத்தான பள்ளம் உள்ளது என  தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், செட்டிக்குளம், பெரம்பலூர்.  

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபம் அருகே மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் கம்பத்தின் மேல் பகுதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
பொதுமக்கள், கறம்பக்குடி, புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மார்க் கடை உள்ளது. இதன் அருகில் உள்ள பள்ளமான பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம், கரூர். 

சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிய காலிமனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பிரதான பகுதியாக சீனி கடைமுக்கம் உள்ளது. பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த இந்த பகுதியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான காலிமனை உள்ளது. இது திறந்தவெளி கழிப்பிடமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஓட்டல்,  டீக்கடைகளுக்கு செல்வோர், பஸ் பயணிகள் என இப்பகுதிக்கு வரும் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டுதான் செல்கின்றனர். இந்த திறந்தவெளி கழிப்பிடத்தால் அப்பகுதி வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேதுமாதவன், சுக்கிரன் விடுதி, புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்து சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாத நிலையில், தற்போது நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சிவன் கோவிலில் இரட்டை தேரோட்டம் வைகாசி மாதம் நடைபெற உள்ள நிலையில், இப்பகுதி தேரோடும் தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, ஆட்சியர் சாலைகள் குண்டும், குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை தரமான சாலையாக மாற்ற  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  தெற்கு ரதவீதி, புதுக்கோட்டை. 

பயனற்ற ஆண்கள் கழிப்பறை 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகைபாதர்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில்  ஆண்களுக்கு தேவையான பொது கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறையானது தண்ணீர் வசதியின்றி, பராமரிப்பின்றி உபயோகப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கழிவறையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், டி.பாதர்பேட்டை, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் உள்ள  இந்திரா நகர் தெற்கு மலைக்கோவில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் தோண்டப்பட்ட சாலைகள் சரிசெய்யப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கரன்,  இந்திராநகர் தெற்கு, திருச்சி. 

தெருநாய்களால் அச்சம் 
திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள இந்திரா காந்தி நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதுபோல் துரத்துகிறது. இதனால் ஒரு சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் சிறுவர்-சிறுமிகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இந்திரா காந்தி நகர், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி மாநகராட்சி ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர் வாரப்படாமல் உள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆர்.எம்.எஸ்.காலனி, திருச்சி.

மேலும் செய்திகள்