வடகாடு பகுதியில் பலாப்பழங்கள் விற்பனை மும்முரம்
வடகாடு பகுதியில் பலாப்பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடகாடு:
பலாப்பழங்கள்
வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆடி மாதம் வரை பலாப்பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையாலும், பருவநிலை மாற்றத்தாலும் சற்று தாமதமாக காய்க்க துவங்கிய பலா மரங்களால் விற்பனைக்கு வரும் பலாப்பழங்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
இப்பகுதிகளில் நாவிற்கு தித்திக்கும் சுவை தரக்கூடிய பலாப்பழங்கள் விளைவதால் வெளியூர் மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள் வரையில் உள்ள பலா வியாபாரிகள் விரும்பி வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் இதுவரை 25 சதவீதம் மட்டுமே பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் மீதமுள்ள பலாப்பழங்கள் இனிமேல்தான் விற்பனைக்கு வரும் என்று இங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர். பலாப்பழம் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் வேதனை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதிகளில் அதிகப்படியான பலாமரங்கள் இருந்தும் பெரும்பாலான பலாமரங்களை விவசாயிகள் ஆண்டு மற்றும் மாதக்கணக்கில் குத்தகை மற்றும் ஒத்திக்கு வைத்துள்ளனர். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை தாங்களே சுவைக்க முடியாத சூழலில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
மேலும் குத்தகை மற்றும் ஒத்திக்கு வைக்காமல் இருக்கும் விவசாயிகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு கொண்டு வருவதாகவும், விற்பனை விலை ஓரளவுக்கு இருந்தாலும் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் பலாப்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் நூறு டன்னுக்கு அதிகமாக பலாப்பழங்கள் விளைந்தாலும் எந்தவித மதிப்பு கூட்டு பொருளும் செய்யப்படாததால் ஒருசில சமயங்களில் அதிகப்படியான பலாப்பழங்கள் கால்நடை மற்றும் குப்பைகளில் கூட வீசப்பட்டு வரப்படுகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.