சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-04-04 18:27 GMT
விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). கூலித்தொழிலாளியான, இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதியன்று அதே பகுதியில் உள்ள காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். சிறுமி தனியாக இருந்ததை பார்த்த பாலாஜி, அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல், குற்றம் சாட்டப்பட்ட பாலாஜிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலாஜி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

மேலும் செய்திகள்