தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா:இன்று பக்தர்கள் பொங்கல் வழிபாடு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் இன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு தேரோட்டம் நடக்கிறது

Update: 2022-04-04 18:24 GMT
இளையான்குடி, 
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் இன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு தேரோட்டம் நடக்கிறது.
பங்குனி திருவிழா
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 
இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
விழாவையொட்டி இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாக னத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பொங்கல் விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைபவம் நிகழ்ச்சி இன்று காலை நடக்கிறது. இதையடுத்து இன்று சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை படையல் செய்து வழிபாடு செய்வார்கள். மேலும் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கோவில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பொங்கல் விழாவையொட்டி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
தேரோட்டம்
 நாளை இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் 7- ந்தேதி அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா அன்று காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
சிறப்பு பஸ்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி கோவில் முழுவதும் மின்அலங்காரம் செய்யப்பட்டு கோவில் முழுவதும் ஜொலித்து வருகிறது. பொங்கல் விழா, தேரோட்டம், பால்குட விழா உள்ளிட்ட நாட்களில் தாயமங்கலம் கோவிலுக்கு மதுரை, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்