செஞ்சியில் வியாபாரிகள் மறியல்
செஞ்சியில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை ஆட்கள் மூலம் பொருட்களை இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சியில் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் வரும் பொருட்களை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி, இறக்குவது வழக்கம். இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு கடைக்கு வாகனத்தில் வந்த பொருட்களை கடையில் வேலை பார்ப்பவர்கள் மூலம் இறக்கியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த தொழிலாளர்கள் பொருட்களை இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் தங்களது கடைகளை மூடிவிட்டு செஞ்சி கூட்டுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த செஞ்சி தாசில்தார் பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு வியாபாரிகள் மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். தொடர்ந்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.