விவசாயி அடித்துக்கொலை

சங்கராபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-04 17:35 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் அரசு (வயது 40) விவசாயி. இவருக்கும் இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த முனியன் மகன் வெங்கடேசன் (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு வெங்கடேசனிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அரசு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

சாவு

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வெங்கடேசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அரசு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் மனைவி அரசிளங்குமரி, முனியன் மனைவி ராணி, குமார் மனைவி தங்கமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.  இதனிடையே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் அரசுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கடுவனூருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் அரசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், அரசு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசுவின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறி கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மகேஷ், சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்