தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஒரு முதியவர் தனது உடலில் மண்எண்ெணய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று முதியவர் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் குப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி பூதான் என தெரியவந்தது.
கிணறு வெட்ட எதிர்ப்பு
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் விவசாய நிலத்தில் கிணறு வெட்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுப்பதாகவும், ரூ.25 லட்சம் கேட்பதாகவும், இதனால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.