காரிமங்கலம் அருகே சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஆசிரியை சாவு

காரிமங்கலம் அருகே சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதியதில் கீழே விழுந்த அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-04 17:34 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதியதில் கீழே விழுந்த அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
அரசு பள்ளி ஆசிரியை
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 42). இவர் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய (மேற்கு) நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் கம்பைநல்லூரில் இருந்து காரிமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
 திப்பம்பட்டி அருகே மன்னன் கொட்டாய் என்ற இடத்தில் அதேபகுதியை சேர்ந்த விவசாயி வீராசாமி என்பவர் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை கோமதி, வீராசாமி ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர்.
பரிதாப சாவு
இதில் தலையில் படுகாயம் அடைந்த ஆசிரியை கோமதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்