சுகாதார பணியாளர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும்
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பணிநீட்டிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பேரிடர் கால சுகாதார பணியாளர்கள் அளித்த மனுவில், ‘கொரோனா பேரிடர் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணிகளை செய்வதற்காக செவிலியர் பயிற்சி முடித்த 67 பேர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டோம். நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்து பணியில் சேர்த்தனர். கொரோனா சிறப்பு வார்டு, தடுப்பூசி போடுவது, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்தோம்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் எங்கள் பணி நியமனம் முடிந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். எங்களுக்கு 2 மாதம் சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. எங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நீட்டிப்புக்கு அனுமதிக்க வேண்டும். சம்பள பாக்கியை பெற்றுக்கொடுத்து உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கொடுத்த மனுவில், ‘தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் கடை, ஓட்டல், தள்ளுவண்டி கடைகள் என பல இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது, வினியோகம் செய்வது அதிகரித்துள்ளது. இதனால் நிலம், நீர் மாசுபட்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர், செந்தில்நகர், லட்சுமி நகர், நெல்லைமுத்துநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். டி.டி.சி.பி. அனுமதி பெற்ற எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலைவசதி, குடிநீர் வசதி இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. தெருவிளக்கு வசதியும் இல்லாமல் சிரமப்படுகிறோம். மாதப்பூர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வருகிறோம். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது, சாலைமறியல் செய்வது என முடிவு செய்துள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.