மினிவேன் கவிழ்ந்து பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம். அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்

ஜவ்வாதுமலையில் மினிவேன் கவிழ்ந்து இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.2 லட்சத்தை, அமைச்சர் எ.வ.வேலு வழங்கி ஆறுதல் கூறினார்.

Update: 2022-04-04 17:14 GMT
திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் மினிவேன் கவிழ்ந்து இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.2 லட்சத்தை, அமைச்சர் எ.வ.வேலு வழங்கி ஆறுதல் கூறினார்.

அமைச்சர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புலியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மினிவேனில் சென்றபோது வேன் கவிழ்ந்து 11 பெண்கள்  உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஜவ்வாதுமலை புலியூர் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர்தர சிகிச்சை

சேம்பரை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து உயிரிழந்த 11 பேர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரமும் வழங்கப் பட்டு உள்ளது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சாலைகளை தார் சாலைகளாக மாற்ற டெண்டர் வைக்கப்பட்டு விரைவில் தார் சாலைகள் போடப்படும். திருப்பத்தூர், புதூர் நாடு சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜவ்வாது மலைப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு டாக்டர்களை நியமித்து உரிய சிகிச்சைகள் அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். 

கலெக்டர் அமர்குஷ்வாஹா, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்