தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-04 17:12 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா எறையூர் அடுத்த அம்புலுக்கை பகுதியை சேர்ந்த வைகுண்டவாசன் மனைவி சரஸ்வதி (வயது 48) என்பவர் தனது மகள் கீர்த்தனாவுடன் (15) நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள் இருவரும், திடீரென தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சரஸ்வதியையும், கீர்த்தனாவையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்கள் இருவரின் மீதும் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து, சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சரஸ்வதி கூறுகையில், எனது கணவர் பெயரில் உள்ள 2½ ஏக்கர் நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.எங்கள் நிலத்திலேயே விவசாய கிணறு ஒன்று உள்ளது. எனது கணவரின் அறியாமையை பயன்படுத்திய எனது உறவினர் ஒருவர், எங்கள் கிணற்றுக்கு மின் மோட்டார் இணைப்புக்கான சர்வீஸ் வாங்கித்தருவதாக கூறி அவர், போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து அபகரித்துக்கொண்டார். இதுபற்றி அவரிடம் சென்று நியாயம் கேட்டதற்கு எங்களை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் இருவரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்