ரூ.30 லட்சத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு
வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் செல்வநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.
வேங்கிக்காலில் புதிய நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிய நூலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலகம் அமைப்பதற்கு பொதுமக்கள் பங்களிப்பாக ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு பாதிப்பு இல்லாமல்..
வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் புதிய நூலகம் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சிறிய கோவில்கள் உள்ளன.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் சுமார் 50 ஆண்டுகளாக உள்ள கோவில், எனவே கோவிலுக்கு பாதிப்பு இல்லாமல் நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை வைத்தனர்.
அப்போது கலெக்டர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கே முன்மாதிரியாக இந்த நூலகம் அமைக்கப்பட உள்ளது. எனவே இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.