மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் கையை பிளேடால் வெட்ட முயன்ற நில அளவை ஊழியர்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஓய்வுப்பெற்ற நிலஅளவை ஊழியர் கலெக்டர் முன்னிலையில் பிளேடால் கையை வெட்ட முயன்றார். அவரை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்து அனுப்பினார்.

Update: 2022-04-04 16:52 GMT
வேலூர்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஓய்வுப்பெற்ற நிலஅளவை ஊழியர் கலெக்டர் முன்னிலையில் பிளேடால் கையை வெட்ட முயன்றார். அவரை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்து அனுப்பினார்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் பேபிஇந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பிளேடால் வெட்ட முயற்சி

கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா குடிசை கிராமத்தை சேர்ந்த ஓய்வுப்பெற்ற நிலஅளவைத்துறை ஊழியர் ராமன் என்பவர் கலெக்டரிடம் மனு அளித்தார். பின்னர் அவர், கிராமத்தில் உள்ள நிலத்தை அளந்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்றுகூறி திடீரென பிளேடால் தனது கையை வெட்டி கொள்ள முயன்றார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தார். பின்னர் அவர், அங்கிருந்து ராமனை வெளியேற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து அவரை வெளியே அழைத்து சென்ற போலீசார், பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும். அதனை விடுத்து தவறான செயலில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியரான நீங்கள் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தினர். பின்னர் ராமனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் வாழ்த்து

கூட்டத்தில், குடிசை மாற்று வாரியம் மூலம் 12 பேருக்கு குடியிருப்பு ஆணைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார். ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஊட்டியில் நடந்த மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதனால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வழக்கத்தை விட குறைவான பொதுமக்களே வருகை தந்தனர்.

மேலும் செய்திகள்