காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் வரவேற்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதனை சுற்றி பெண்களை அமர வைத்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், அண்ணாச்சி, சின்னதுரை, குப்பன், இந்திராப்ரியன், முருகபூதி, குணசேகரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வினோதினி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன் தலைமை தாங்கினார். நகர துணைத் தலைவர் சோமசுந்தரம், கண்ணமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மணி, நகர செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை பங்கேற்று சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.அசோக்குமார், நகர நிர்வாகிகள் மண்ணு, சீனு, இளமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக போராட்டத்துக்கு கியாஸ் சிலிண்டரை தூக்கி வந்தபோது, அசம்பாவிதம் ஏற்படும் எனக்கருதி அங்கிருந்த ஆரணி போலீசார் கியாஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர். காங்கிரஸ் கட்சியினர், இது காலி கியாஸ் சிலிண்டர், எனக் கூறியதும், அதை திரும்ப கொடுத்தனர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேவூர் கிளை செயலாளர் தமிழரசன் தலைமையில் சமையல் கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி, ஆட்டோவை கயிறுக்கட்டி இழுத்து ஊர்வலமாக முனீஸ்வரர் கோவிலில் இருந்து சேவூர் பஸ் நிறுத்தம் வரை வந்தனர்.
பின்னர் அங்கு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் உயர்வு, பட்டுநூல், ஜரிகை விலை உயர்வு மற்றும் மருந்துகளின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு, ரவி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மல்லவாடி
திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.