தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
காணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே காணையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு அரசு சார்பில் நகை கடன் தள்ளுபடிக்கான உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தள்ளுபடி பட்டியலில் பயனாளிகளுக்கான தேர்வில் காணை, கருங்காலிப்பட்டு, கோனூர், குப்பம், வெண்மணியாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள், பட்டியலில் இடம்பெறவில்லை எனக்கூறி அவர்கள் நேற்று காலை அந்த வங்கிக்கு திரண்டு வந்து திடீரென வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
பின்னர் வங்கி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காததால் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விசாரித்து உரிய பதில் தெரிவிப்பதாக போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.