மதுரையில் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்படும்

மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. அங்கு ஆய்வு செய்த மதுரை எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்தராவ், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

Update: 2022-04-04 16:26 GMT
ராமநாதபுரம், 
மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. அங்கு ஆய்வு செய்த மதுரை எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்தராவ், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தெரிவித்தார்.
எய்ம்ஸ் மாணவர்களுக்கு வகுப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்குவதற்காக, அங்கு 5-வது தளத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 
50 மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மாணவ-மாணவிகள் விடுதி கட்டிடங்கள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. 
இதுதவிர, அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய டிஜிட்டல் நூலகம், விடுதியில் இன்டர்நெட் வை-பை வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், நேற்று முதல் எய்ம்ஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. வந்திருந்த மாணவ-மாணவிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் வகுப்புக்கு சென்றனர். 
இயக்குனர் பேட்டி
முன்னதாக மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குனர் ஹனுமந்தராவ், வகுப்புகள் மற்றும் ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  35 மருத்துவ மாணவ-மாணவிகள் முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். மீதம் உள்ள மாணவர்கள் விரைவில் வர உள்ளனர்.  இங்குள்ள மாணவர்களுக்காக உடற்கூறு இயல், உடல் இயங்கு இயல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத் துறைக்கு 8 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இதுதவிர, ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இருந்து 6 பேராசிரியர்கள் இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.
கட்டுமான பணி
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் கட்டமாக 200 ஏக்கரில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கட்டிடம் கட்டும்பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்னும் 6 மாதங்களில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற உள்ளது. முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகள் கட்டப்படும். ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
அதேபோல் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் தொற்று நோய், புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் தற்காலிகமாக இங்கு வகுப்பு நடத்தப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எய்ம்ஸ் நிர்வாகம் செய்துள்ளது. 
விரைவில் நிறைவடையும்
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பொறுத்தமட்டில், கல்லூரி கட்டிடம் கட்டுவதற்குமுன் தற்காலிகமாக வேறு கட்டிடத்தில் கல்லூரி இயங்குவது வழக்கம். 
அதே போல் மதுரையில் தற்போது மருத்துவ கல்லூரி கட்டுமான பணி தொடங்க இருப்பதால் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்பு நடைெபறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்