தியேட்டரில் ‘காஷ்மீர் பைல்ஸ்' படம் இலவச காட்சி
முதல்வரின் அரசியல் செயலாளர் ஜீவராஜின் சொந்த செலவில் காஷ்மீர் பைல்ஸ் படம் தியேட்டரில் இலவச காட்சியாக திரையிடப்பட்டது.
சிக்கமகளூரு:
நாடு முழுவதும் ‘காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் உள்ள ஒரு தியேட்டரில், காஷ்மீர் பைல்ஸ் படத்தை பொதுமக்கள் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக கண்டு களிக்க சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ஜீவராஜ் தனது சொந்த செலவில் 2 நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளை வாங்கி ஏற்பாடு செய்து இருந்தார்.
அதன்படி நேற்றுமுன்தினம்(ஞாயிற்றுக்கிழமை), நேற்று ஆகிய 2 நாட்கள் ஜீவராஜ் ஏற்பாட்டின் பேரில் அந்த தியேட்டரில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்க திரையிடப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் அந்த தியேட்டரில் படத்தை பார்க்க குவிந்தனர். முதல் நாளான நேற்றுமுன்தினம் பொதுமக்களுடன் அமர்ந்து ஜீவராஜ் படத்தை கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.